அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிங்கம் பட்டியில் இருந்து மணப்பாறை நோக்கி அரசு டவுன் பேருந்து சென்று உள்ளது. இந்த பேருந்தை கரட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை டிரைவர் இறக்கிவிட்டு கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்து கொண்டிருந்த லாரி பேருந்தின் பின் பகுதியில் பலமாக மோதி விட்டது. இதில் பேருந்து பள்ளத்திற்குள் சென்று அங்கிருந்த மின்கம்பத்தில் முட்டி நின்றுவிட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஜானகி, ஜீவானந்தம், முத்துலட்சுமி, சுந்தர்ராஜ், சின்னப்பொண்ணு, பேருந்தின் ஓட்டுனர் ஜான் அரோகியராஜ் உள்ளிட்ட 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
இவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மணப்பாறையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் இந்த விபத்தினால் பேருந்து மற்றும் லாரியின் கண்ணாடிகள் உடைந்து சிதறி கிடந்ததை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர். அதன்பின் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை போலீசார் சரிசெய்து வாகனங்களை அனுப்பியுள்ளனர்.