தமிழகம் முழுவதிலும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் டீசல் விலை உயர்வு காரணமாக பார்சல் லாரி வாடகை 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட 6மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் என்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்காவிட்டால் மார்ச் 15ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். அவ்வாறு போராட்டம் தொடர்ந்தால் மக்கள் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்படும்.