தீ விபத்தில் சிக்கி கொண்ட தாய் தனது குழந்தைகளை காப்பாற்ற துணிச்சலாக முடிவெடுத்து செய்த செயலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
துருக்கி இஸ்தான்புல் நகரின் எசென்லர் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு தாய் தனது 4 குழந்தைகளுடன் சிக்கியுள்ளார். அவர்கள் வீடு முழுவதும் தீ வேகமாகப் பரவியதால் வீட்டின் ஜன்னல்களில் இருந்து கரும்புகை வெளியே வரத் தொடங்கியது.
அந்த பதட்டமான சூழ்நிலையில் குழந்தைகளை காப்பாற்ற அந்தத் தாய் சாமர்த்யமாகவும், தைரியமாகவும் ஒரு முடிவை எடுத்தார். அதன்படி தனது ஒவ்வொரு குழந்தையையும் தூக்கி ஜன்னல் வழியாக கீழே போட்டார். அந்தக் குழந்தைகள் கீழே விழுந்து அடிபடாமல் இருக்க அங்கு கூடிய பொதுமக்கள் ஒரு போர்வையை விரித்து பத்திரமாக மீட்டனர்.
இதை தொடர்ந்து அந்தத் தாயும் மீட்கப்பட்டார். அதன்பின் 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஐந்து பேரும் எந்தக் காயமும் இல்லாமல் நலமுடன் உள்ளனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து விசாரித்ததில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.