தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக பேருந்துகளை இயக்க முடியாததுடன், பணிக்கு வரும் தொழிலாளர்களை அச்சுறுத்தி வேலை செய்ய விடாமல் தடுக்கும் முயற்சிகளும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து கழகங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையாக தற்காலிக டிரைவர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு மாவட்டங்களிலும் பேருந்துகளை போலீஸ் பாதுகாப்புடன் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சாலை பயிற்சி நிறுவனத்தில் படித்து முடித்த டிரைவர்களின் பட்டியல்கள் பெறப்பட்டு அவர்களை வேலைக்கு அழைக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது.
அதோடு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் பயிற்சி பெற்றவர்களின் பட்டியலும் பெறப்பட்டு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள போக்குவரத்து கழகங்களில் தொழில்நுட்ப பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பல மாவட்டங்களில் தற்காலிக பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசின் அறிவுரையின் படி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலும் சேகரிக்கப்பட்டுள்ளது.