தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே இரண்டாம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என சுனில் அரோரா தெரிவித்தார். வேட்புமனுத்தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20ஆம் தேதியும் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 22ஆம் தேதி கடைசி நாள் என்றும், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை வேகப்படுத்த தொடங்கியுள்ளன. இந்த அறிவிப்பு வெளியாகிய நிலையில் திமுக தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அமைத்தது.
திமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த டி ஆர் பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கே.என் நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஆர்.எஸ் பாரதி, எ.வ வேலு ஆகியோரும் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் அறிவிப்பு வெளியான உடனே அடுத்தடுத்து நடவடிக்கைகளை திமுக முடுக்கி விட்டுள்ளது.
அதே போல ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சை எடுத்துள்ளனர். அதிமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய இணை அமைச்சருமான கிஷன் ரெட்டி, அதிமுகவுடன் விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதிமுக கூட்டணியில் எத்தனை இடங்கள் என்பது பற்றிய தமிழக பாஜகவும், டெல்லி தலைமையும் இணைந்து முடிவு செய்யும் என தெரிவித்தார்.