கோவிலில் நகையை திருடிய பிரபல கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேற்றுக்கால் மாரியம்மன் கோவிலினுள் கடந்த 25-ம் தேதி அன்று நள்ளிரவில் கொள்ளையர்கள் 3 பேர் புகுந்துள்ளனர். அவர்களை விசாரித்த காவலாளி கணேசனை மூவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரை ஒரு அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு கொள்ளையர்கள் கோவிலுக்குள் சென்றுள்ளனர். அங்கு கோவிலுனுள் இருந்த அரை பவுன் பொட்டு தாலி மற்றும் ஒரு கிலோ அளவிலான வெள்ளிக்கவசம் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி ஓடினர்.
இதையடுத்து கீரம்பூர் பகுதியில் உள்ள காட்டில் மூன்று பேரும் பணத்தை பங்கு வைத்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஊர் பொதுமக்கள் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து விசாரித்துள்ளனர். அதில் அவர்கள் தாங்கள் பிரபல கொள்ளையர்கள் என்றும், போலீஸில் கூறினால் சும்மா விடமாட்டோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அவர்களை சரமாரியாக தாக்கியதோடு, பரமத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பின் பரமத்தி காவல்துறையினர் அவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தி விட்டனர்.