நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று 70,40,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஈழத்தமிழ் பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈழத்தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். அவர் அங்குள்ள சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் நடிகர் ஆர்யா தன்னிடம் ஆன்லைன் மூலம் காதலை தெரிவித்ததாகவும் , பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி 70,40,000 ரூபாய் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு கொடுத்த பணத்தையும் திருப்பித் தர மறுக்கிறார் என்று விட்ஜா நடிகர் ஆர்யா மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் விட்ஜா நடிகர் ஆர்யா மீது பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,” தான் பணத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று ஆர்யா ஆசைவார்த்தை கூறினார் . மேலும் என்னிடமிருந்து அவர் பணத்தை பெற்றுக் கொண்டு திருமணம் செய்ய மறுத்துவிட்டார். சில மாதங்கள் கழித்து என்னை போல பல பெண்களை அவர் ஏமாற்றியது எனக்கு தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் என்னை மிரட்டுகிறார்” என்று விட்ஜா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆர்யா என்ன செய்தாலும் நான் எனது புகாரை வாபஸ் வாங்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் விட்ஜாவின் புகார் குறித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. உத்தரவின் பேரில், நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் விட்ஜாவிடமிருந்து 70 லட்சம் ரூபாய் பணத்தை தன் மேலாளர் முகமது ஹுசைனி என்பவரது வங்கி கணக்கில் ஆர்யா மணி டிரான்ஸ்பர் மூலம் பெற்றுக் கொண்டது உறுதியாகி உள்ளது. மேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆர்யா கருத்துக்கள் எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.