அமெரிக்காவில் தற்போதுவரை 5 கோடி மக்களுக்கு பைசர், மாடர்னா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை 2,90,55,491 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மேலும் 5,20,878 பேர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் கூறியுள்ளது. அந்நாட்டில் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 5 கோடி பேருக்கு தடுப்புசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறுகையில் “நாங்கள் முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போட நினைத்து இருந்தோம். ஆனால் அதில் பாதி அளவே தான் எட்டியிருக்கிறோம். இருந்தாலும் அமெரிக்காவில் 65 வயதை கடந்தவர்களில் 50% பேரும், கொரோனோ பாதித்தவர்களில் 75% பேரும் தடுப்பூசியில் ஒரு டோஸ் போட்டு கொண்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்கர்கள் கைகளை சுத்தம் செய்வது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது இவற்றில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும்” கூறியுள்ளார்.