அமெரிக்காவில் ஒரு என்ஜின் கொண்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி 3 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வடகிழக்கு ஜார்ஜியாவில் இருக்கும் Gainsville விமான நிலையத்தில் Cessna182 என்ற ஒற்றை என்ஜின் விமானம் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை புளோரிடாவிற்கு மூன்று நபர்களுடன் சென்றுள்ளது. இந்நிலையில் விமான நிலையத்தில் இருந்து சென்ற விமானம் சுமார் 3.2 கிலோ மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளாகியது என்று மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது.
இதனைத்தொடர்ந்து உடனடியாக தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த நபர்களின் உடலை கைப்பற்றினர். மேலும் விமானத்தில் பயணித்த 3 நபர்கள்தான் உயிரிழந்ததாக விமான போக்குவரத்து துறை உறுதி செய்திருக்கிறது. இருப்பினும் உயிரிழந்த நபர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் விமானத்தின் இறக்கை ஒரு வீட்டின் மேல் விழுந்துள்ளது. இதனால் அந்த வீடு சேதம் அடைந்திருக்கிறது.
எனினும் அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் விமானத்திலிருந்த எரிபொருள் ஒரு வீட்டின் மேல் கொட்டியுள்ளது. இதனால் உடனடியாக அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும் இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் சேர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.