கேரள பல்கலைக்கழக மாணவர் கத்திக்குத்து சம்பவத்திற்கு கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அகில் என்ற SFI மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர் மீது கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறை 20 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து , 16 பேரை கைது செய்துள்ளனர். மேலும் SFI என்ற மாணவர் அமைப்பு அதே மாணவர் அமைப்பை சார்ந்த மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ABVP , KSU உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் மாணவர் மீது அரங்கேறிய தாக்குதல் குறித்து கேரள மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கண்டனம் தெரிவித்ததோடு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் 43 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. கேரளாவில் ஆளும் CPIM கட்சியின் மாணவர் அமைப்பான SFI மாணவர் அமைப்பின் பயங்கர முகம் மீண்டுமொரு முறை வெளிப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பாசிசம் அடிப்படையில் செயல்படுகிறது.பிற மாணவர் அமைப்புகளை செயல்பட விடாமல் தடுப்பதுடன், தனது சொந்த அமைப்பு உறுப்பினர்கள் மீது கூட தாக்குதல் நடத்தும் அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.