மணப்பாறை அருகே பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் உள்ள பாரதிநகரில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹன்சிகா என்னும் ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. சென்ற வியாழக்கிழமை அன்று இரவு இந்த குழந்தை திடீரென விடாமல் அழுது கொண்டே இருந்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கிருந்து குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் பாரதிநகர் பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.