பாலியல் தொல்லை கொடுத்த டி.ஜி.பியை பணியிடை நீக்கம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாதர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையின் சிறப்பு டி.ஜி.பி.யாக உள்ள ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐ.பி.எஸ் அலுவலராக பணிபுரியும் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனை விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு விசாகா என்ற கமிட்டி அமைக்கப்பட்டது. அவர்கள் ராஜேஷ் தாஸை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்துள்ளனர். இதனையடுத்து ராஜேஷ் தாஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் பாதிக்கப்பட்ட பெண், டி.ஜி.பி மீது புகார் அளிக்க சென்றபோது அவரை உயர் அதிகாரிகள் சிலர் புகாரளிக்க விடாமல் தடுத்துள்ளனர். இதனால் பாலியல் தொல்லை செய்த டி.ஜி.பி. மீதும், புகார் அளிக்க விடாமல் தடுத்த உயர் அலுவலர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாதர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் டி.ஜி.பி ராஜேஷ் தாஸை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் மனு அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தமிழகம் முழுவதும் மாதர் சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.