திருப்பூரில் ஏடிஎம் மெஷினை திருடி சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு மர்ம நபர்கள் 4 பேர் ஏடிஎம் கதவை உடைத்து, கேமிராவில் ஸ்ப்ரே அடித்து விட்டு, ஏடிஎம் மிஷினை உடைத்து தூக்கி கொண்டு காரில் தப்பி சென்றுள்ளனர். மேலும் ஏடிஎம் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து ஊத்துக்குளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து ஏடிஎம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டுள்ள்ளனர். அப்போது மர்ம நபர்கள் 4 பேர் ஏடிஎம் மிஷினை காரில் ஏற்றிக்கொண்டு சென்ற சம்பவம் அதில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து கேமராவில் பதிவாகி இருந்த காரின் நம்பரை வைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்து கொண்ட கொள்ளையர்கள் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே காரை நிறுத்திவிட்டு ஏடிஎம் மிஷின் உடன் வேறு காரில் தப்பிச்சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அக்கொள்ளையர்களை தீவிரமாக தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் மிஷினில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்து வங்கி அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.