நன்றாக படிக்கும்படி பெற்றோர் கண்டித்ததால் தன்னை கெடுத்துவிட்டதாக 10ம் வகுப்பு படிக்கும் மாணவி நாடகமாடியது தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தரகாண்டை சேர்ந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் அந்த மாணவி வீட்டுப்பாடம் செய்யாததால் தலைமை ஆசிரியர் கண்டித்தது மட்டுமல்லாமல் அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து அவர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோர் பாடத்தில் அதிக கவனம் செலுத்தும்படி அச்சிறுமியை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த சிறுமி தனது பெற்றோரை பழிவாங்க தனது வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் சென்று சிறிதுநேரம் இருந்துள்ளார். அச்சமயம் வீட்டில் மகளை காணவில்லை என்று அந்த மாணவியின் பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர்.
அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த மாணவி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் சிலர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதே நேரத்தில் அந்த மாணவியை போலீசார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை யாரும் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் இவர் பொய் சொல்கிறார் என்றும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மாணவியிடம் நடத்திய விசாரணையில் அந்த மாணவியை நன்றாக படிக்குமாறு பெற்றோர் கண்டித்ததால் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் நாடகம் ஆடியது தெரிய வந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அந்த மாணவிக்கும் பெற்றோருக்கும் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.