திருப்பூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து காரில் தூக்கி சென்ற கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
திருப்பூர் ஊத்து குழி சாலையில் உள்ள சர்க்கார் பெரிய பாளையத்தில் பேங்க் ஆஃப் பரோட்டா இயங்கிசெயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இருந்து ATM இயந்திரத்தின் கதவுகள் நேற்று அதிகாலை உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
வங்கி கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்த போது நான்கு பேர் கொண்ட முகமூடி கும்பல்…. நான்கு சக்கர வாகனத்தில் கயிற்றைக் கட்டி ஏடிஎம் இயந்திரத்தை வாசல் வரை இழுத்து சென்று பின்னர் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஏடிஎம் இயந்திரம் கொள்ளை போன இடத்தில் திருப்பூர் மாவட்ட காவல் அதிகாரி ஜெயச்சந்திரன், காங்கேயம் டிஎஸ்ஐ தன்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். கடந்த 19ஆம் தேதி ATM இயந்திரத்தில் 15லட்சம் ரூபாய் பணம் வைத்ததாகவும், இதில் தற்போது ஒன்றரை லட்சம் ரூபாய் வரை நோட்டுகள் இருக்கலாம் என்றும் வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். கொள்ளையடிக்க வந்தவர்கள் கார் ஒன்றை திருடி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பெருந்துறை நெல்லிக் கவுண்டன் பாளையத்தை சேர்ந்த வாகனத்தின் உரிமையாளர் பாலமுருகன் இது தொடர்பாக போலீசாரிடம் அளித்துள்ள புகாரில், சாலையில் நிறுத்தி வைத்திருந்த காரில் காலையில் பார்த்தபோது காணவில்லை என்று கூறியிருக்கிறார். காரை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வாடகைக்கு விட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .