இன்றைய அனல் பறக்கும் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன
கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் லீக் சுற்று முடிந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. அரை இறுதியில் இந்தியாவை நியுசிலாந்து அணியும், ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியும் வென்றது. இந்நிலையில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோதுகின்றன. உலக கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை. ஆகவே இன்று நடைபெறும் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இங்கிலாந்து அணி27 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. அந்த அணி பேட்டிங், பீல்டிங், பவுலிங் மூன்றிலும் வலிமையாக உள்ளது. பவுலிங்கில் ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோரும், பேட்டிங்கில் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் முதுகெலும்பாக திகழ்கிறார்கள்.
ஆகவே அந்த அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. லீக் சுற்றின் முடிவில் நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து வீழ்த்தியுள்ளதால், அதே உற்சாகத்துடன் வெற்றி முனைப்பில் இன்று வீரர்கள் களமிறங்குவார்கள்.
நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு வரும் என்று அந்த அணி வீரர்கள் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டுமே சிறப்பாக ஆடி வருகிறார். அவருக்கு உறுதுணையாக அனுபவ வீரர் ராஸ் டெய்லர் ஆடி வருகிறார். இவர்கள் இருவரை தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் அந்த அணியில் ஒட்டு மொத்த பலமே பவுலிங் தான்.
பவுலிங்கில் ட்ரெண்ட் போல்ட், லாகி பெர்குசன், மேட் ஹென்றி ஆகியோர் மிரட்டுகிறார்கள். அந்த அணி இறுதி போட்டிக்கு வந்திருக்கிறது என்றால் அது இவர்களால் தான். பீல்டிங்கிலும் அந்த அணி வலுவாக உள்ளது. இன்றைய போட்டியில் இவர்கள் மீண்டும் ஜொலித்தால் கோப்பையை வெல்லலாம். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் இதுவரை 90 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் நியூசிலாந்து அணி 43 முறையும், இங்கிலாந்து 41 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.