உரிய ஆவணமின்றி வைத்திருந்த 19, 22, 300 ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதால் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் கூடலூர்-கேரள எல்லைப் பகுதிகளிலும், கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் கூடலூர் அருகில் இருக்கும் கேரள எல்லையான நாடுகாணி சோதனை சாவடியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டபோது, கர்நாடகாவிற்கு கேரளாவிலிருந்து கூடலூர் வழியாக காய்கறி மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு லாரிகளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது உரிய ஆவணங்களின்றி பணம் வைத்திருந்த ரதீஸ், சாகிப், சுசீன், ரம்சீத் போன்ற சிலரிடம் இருந்து மொத்தம் 19 லட்சத்து 22 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.