காஞ்சிபுரத்தில் பழுதாகி நின்ற கார் மீது லாரி ஒன்று வேகமாக மோதியதில் இரண்டு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் தமிழ்செல்வன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது உறவினரான அற்புதம், பவானி, அம்பிகா ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு உறவினர் ஒருவரின் வீட்டிற்கு காரில் சென்னை நோக்கி சென்றுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் பழுதாகி சாலையில் நின்றுள்ளது. பழுதான காரை சரிபார்ப்பதற்காக தமிழ்செல்வன் மற்றும் பவானி ஆகிய இருவரும் காரை விட்டு இறங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பழுதான காரின் மீது வேகமாக மோதியது.
இதில் பவானி, தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரினுள் இருந்த அம்பிகா, அற்புதம் ஆகிய இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பி விட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பவானி, தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரின் உடலையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.