ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அடுத்து வெள்ளிக்கிணறு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் தனது வீட்டின் அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். குமரேசனுக்கு திருமணம் ஆகிய நிலையில் இன்னும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமி கடைக்கு அடிக்கடி வந்ததால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. சில காலங்களாக இந்த நட்பு தொடரப்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் போகப்போக குமரேசன் சிறுமியின் மீது சபலப்பட்டு உடல் ரீதியாக சின்ன சின்ன சில்மிஷங்களை முதலில் தொடங்கியுள்ளார்.
பின் அச்சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இப்படி அந்த சிறுமியை ஏமாற்றி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் உடல் நிலையில் மாற்றங்கள் இருப்பதாகவும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிறுமியின் பெற்றோர் அச்சிறுமியை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு அச்சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார் என்று கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அச்சிறுமியிடம் அங்கேயே விசாரித்து உள்ளனர்.
அப்போது அந்த சிறுமி அழுது கொண்டு மளிகை கடைக்காரரின் ஆசை வார்த்தை மற்றும் லீலைகளைப் பற்றி கூறியுள்ளார். இதனையடுத்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று குமரேசன் மீது புகார் அளித்ததுள்ளனர்.இதன் பேரில் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குமரேசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நோக்கில் போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர்.