வேளாங்கண்ணியில் தங்கும் விடுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டிபிரிவு மாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். சென்ற சனிக்கிழமை அன்று இவர் வேளாங்கண்ணியில் உள்ள ஆரிய நாட்டு பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவருடன் 30 வயதுடைய பெயர் தெரியாத ஆண், ஏழு வயது பெண் குழந்தை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதியில் வசித்து வரும் கருப்பசாமி என்பவரது மனைவி ராணி, 10 வயது ஆண் குழந்தை ஆகிய 5 பேர் அறையில் தங்கியுள்ளனர்.
சம்பவத்தன்று விடுதியின் மேலாளர் விடுதியை கண்காணித்து வந்த போது அவர்கள் தங்கியிருந்த அறை வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தார். இதனால் அறையின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது ராணி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர்களுடன் தங்கியிருந்த இரண்டு குழந்தைகள் கிருஷ்ணன் மற்றும் பெயர் தெரியாத நபர் ஆகிய 4 பேரை அந்த அறையில் காணவில்லை. இதையடுத்து விடுதியின் மேலாளர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ராணி வாயில் நுரை தள்ளி, மூக்கில் ரத்தம் வந்த நிலையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து ராணி இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடன் தங்கியிருந்த 4 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.