நாகப்பட்டினத்தில் தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை மேட்டுக்கடை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற மகன் உள்ளார். இவர் டைல்ஸ் போடும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். மனோஜ்க்கு ஜெர்சி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 7 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் மனோஜ் தனது உறவினர்கள் 11 பேரை அழைத்துக்கொண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை சுற்றி பார்க்க சென்றுள்ளார்.
அங்கு வேளாங்கண்ணி கடற்கரையோரம் சென்ற அவர்களில் சுரேஷ் மனைவி கீர்த்தி, செல்வம் மனைவி சாந்தி, பிரான்ஸ் மனைவி சுருதி ஆகிய மூவரும் கடலுக்குள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது திடீரென வந்த ராட்சத அலை ஒன்று அவர்கள் 3 பேரையும் உள்ளே இழுத்து கொண்டு சென்றுள்ளது. இதையடுத்து அவர்கள் மூவரையும் மனோஜ் அங்கு நின்று கொண்டிருந்த சிலரின் உதவியுடன் காப்பாற்றியுள்ளார்.
ஆனால் மனோஜ் எதிர்பாராதவிதமாக கடலினுள் மூழ்கிவிட்டார். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மனோஜை நீண்ட நேரமாக கடலுக்குள் தேடி பார்த்தனர். ஆனால் அவர் காணவில்லை. சில மணிநேரத்திற்குப் பிறகு மனோஜின் உடல் கரையோரம் ஒதுங்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி கடலோர காவல்துறையினர் மற்றும் கீழையூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.