பெருங்குளத்தூரில் 8 வழிச்சாலை அமைக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக சட்ட பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜா கிழக்கு-மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க கோரி வலியுறுத்தியதோடு, மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவது ஏன் என்ற கேள்வியும் முன்வைத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
ஏற்கனவே சென்னையில் 9 மேம் பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அதற்கான பணிகள் விரைவில் முடியும் என்றும் தெரிவித்தார்.மேலும் பாலம் கட்டுவதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு அரசு காரணம் அல்ல என்றும், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தான் காரணம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பெருங்களத்தூரில் நான்கு வழிச்சாலையை எட்டு வழி சாலையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பெருங்களத்தூரில் பல்லடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.