பெரியார் சிலை மீது காவி துண்டு போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் பெரியார் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை மீது காவி துண்டு போடப்பட்டு, தலையில் தொப்பி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின் திராவிட கழக பிரமுகர்கள் பெரியார் சிலை மீது போடப்பட்டிருந்த துண்டினையும், தலையில் வைக்கப்பட்டிருந்த தொப்பியையும் அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இவ்வாறு பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஒரத்தநாடு காவல்நிலையத்தில் திராவிடர் கழக ஒரத்தநாடு நகர தலைவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.