உலககோப்பை இறுதி போட்டியில் தோல்வியடைந்த பின் மைதானத்தில் மார்ட்டின் கப்தில் கண்ணீர் விட்டு அழுதார்.
நேற்று நடந்த பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி போராட்டத்தை சந்தித்தது. தொடக்கத்தில் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்ததால் இங்கிலாந்து திணறியது.
பின்னர் பென் ஸ்டோக்சும், ஜாஸ் பட்லரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். பட்லர் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் கடைசி 1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட 1 ரன் எடுத்து 2வது ரன் ஓடும் போது ரன் அவுட் ஆனார். பென்ஸ்டோக்ஸ் 84* ரன்கள் அடித்த நிலையில் போட்டி டை ஆனது. இதனால் முதல் முறையாக உலக கோப்பையில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சூப்பர் ஓவரில் அணிக்கு போராடிய பட்லரும், ஸ்டோக்சும் களமிறங்கினர். போல்ட் வீசிய அந்த ஓவரில் இருவரும் சேர்ந்து 15 ரன்கள் எடுத்தனர். பின்னர் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்மி நீஷமும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய இந்த ஓவரில் நியூசி அணிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த பந்தை எதிர்கொண்ட கப்தில் அடித்து விட்டு வேகமாக 2 ரன்கள் எடுக்க முயன்று கிரீசுக்குள் பாய்ந்தார்.அப்போது போது பட்லர் பந்தை சரியாக பிடித்து ரன் அவுட் செய்தார். இதனால் அவர் ஆட்டமிழந்தார். கோப்பையும் கை நழுவிப்போனது. ஐசிசி விதிப்படி அதிக பவுண்டரி அடித்த அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.
இந்நிலையில் அரங்கம் அதிர வெற்றியை இங்கிலாந்து வீரர்கள் ஒருபுறம் கொண்டாடி கொண்டிருக்க மறுபுறம் மார்ட்டின் கப்தில் மைதானத்தில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுதார். அப்போது ஜேம்ஸ் நீஷம் மற்றும் சோதி அவரை சமாதானப்படுத்தி கொண்டிருக்க இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ்சும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். கடைசி வரை சிறப்பாக ஆடியது நியூசிலாந்து அணி. ஆனால் பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது நியூசிலாந்து அணிக்கு வேதனையை கண்டிப்பாக கொடுத்திருக்கும். ஐசிசியின் இந்த விதியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.