வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தினால் கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த வங்கியில் உள்ள அதிகாரிகள் நேற்று மாலை பணிகளை முடித்த பின்னர் வங்கியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின் இன்று அதிகாலை திடீரென்று வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த பொருட்கள் எரிந்து கொண்டிருந்தது.
இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை பரவ விடாமல் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் பல ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் தீயில் கருகி சாம்பலானது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.