மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பத்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் தங்கதுரை. இவருடைய மகன் சரவணராஜ் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று சரவணராஜ் தண்ணீர் பிடிப்பதற்காக சாலையோரத்தில் நடந்து சென்று தண்ணீரை பிடித்து விட்டு அங்கு ஓரமாக நின்றுள்ளார். அந்த சமயத்தில் வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனம் சரவணராஜ் மீது மோதியுள்ளது.
இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.