நாம் ஸ்மார்ட்டாக செயல்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவியதால் பெரும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனரான மைக்கேல் ரியான், நாம் ஸ்மார்ட்டாக செயல்பட்டால் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “கொரோனா பரவலை முடிந்தவரை கட்டுப்பாட்டில் வைப்பதே இப்போதைக்கு நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் அனுமதி மற்றும் இறப்பு விகிதங்கள் குறைந்துள்ளது.
நாம் ஸ்மார்ட்டாக செயல்பட்டால் கொரோனா பரவலால் ஏற்படும் இறப்புகளை இந்த ஆண்டுக்குள் முடிவுக்குக் கொண்டு வரலாம். இப்போது தொற்று பாதிப்பு குறைந்து இருப்பதால், நாம் சாதித்து விட்டோம் என்று திருப்தி அடைந்துவிடக்கூடாது. ஏனென்றால் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்காது என்பதற்கு எந்த நம்பிக்கையும் இல்லை” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.