தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மக்களுக்கு ஓட்டுக்காக பணத்தை கொடுப்பதை தேர்தல் ஆணையத்தால் முற்றிலுமாக தடுக்க முடிவதில்லை. இந்நிலையில் பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்துள்ளார்.
அந்த மனுவில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாக்கினை பதிவு செய்யும்போது “நான் ஓட்டுக்கு பணம் வாங்குவதில்லை” என்று சத்திய பிரமாணம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது வந்துள்ளது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை ஏற்க மறுத்துள்ளனர். ஏனெனில் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போடும் ஒவ்வொரு வாக்காளர்களையும் சத்தியப்பிரமாணம் செய்ய வைப்பது என்பது நடக்காத ஒன்று என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து வைத்துள்ளனர்.
மேலும் மனுதாரர் வேண்டுமானால் இந்த வழக்கிற்காக தமிழக அரசை நாடலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வேட்பாளர்களை வேண்டுமானால் அந்தந்த தொகுதி மக்களுக்கு மத்தியில் நிற்க வைத்து “ஓட்டுக்கு நான் பணம் தர மாட்டேன்” என்று சத்தியம் செய்ய வைக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.