வனப் பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக வனவிலங்குகள் இடம் பெயர ஆரம்பித்ததால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை புலி போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோடை காலம் காரணமாக வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு அனைத்து மரங்களிலும் இலைகள் உதிர ஆரம்பித்து விட்டது. இதனால் ஒரு நாளுக்கு 250 கிலோ பசுந்தீவனங்கள் சாப்பிடும் பழக்கம் கொண்ட காட்டு யானைகள் மற்றும் பிற விலங்குகள் கூட்டம் கூட்டமாக தீவனங்கள் கிடைக்கும் இடங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளன.
இவ்வாறு இடம்பெயரும் வனவிலங்குகள் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பகுதிகளில் இருக்கும் குடியிருப்புக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதோடு, அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களையும் நாசம் செய்கின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை அதிகாரிகள் துரத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகளில் காட்டு யானைகளை ஈர்க்கக் கூடிய பலா, பாக்கு, வாழை போன்ற பயிர்களை பயிரிட வேண்டாம் எனவும், தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் ஊருக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.