தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
இதனையடுத்து 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் வருகின்ற கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 9 முதல் 11 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்ததால் 11ஆம் வகுப்பு சேரும் மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது அந்த திட்டம் இல்லை என கூறப்பட்டுள்ளது.