திண்டுக்கல் அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டியபட்டி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் சில தினங்களாக குடிநீர் சரியாக வினியோகிக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிக்கும் நீரை கூட விலைக்கு வாங்கி உபயோகித்து வந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி ஒன்றிய அதிகாரி மற்றும் ஊராட்சி மன்றத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இது குறித்து அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த மக்கள் நேற்று முன்தினம் திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் காலிக்குடங்களுடன் சென்று மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திண்டுக்கல் காவல்துறை துணை ஆய்வாளர் விஜய், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.