நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தொடர்ந்து தண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதன்படி சிலிண்டர் விலை 100 ரூபாய் வரை உயர்ந்து 835 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. விண்ணை முட்டும் இந்த விலை உயர்வு காரணமாக காய்கறிகள் முதல் அத்தியாவசியப் பொருட்கள் விலை வரை அனைத்தும் உயர்ந்து கொண்டே வருகின்றன. அந்த வரிசையில் தற்போது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தனியார் குடிநீர் வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர், டீசல் விலை உயர்வு காரணமாக தண்ணீர் விலையை உயர்த்தியுள்ளனர்.
அதன்படி மார்ச் 1ம் தேதி முதல் பெரிய,சிறிய கூடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டதை விட மூன்று ரூபாய் அதிகரித்து பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றன. இந்த திடீர் விலை ஏற்றத்தால் நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைக் குடும்பங்களில் தண்ணீருக்குக் கூட போராடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பெரிய குடம் 13 ரூபாய்க்கும், சிறிய குடம் 8 ரூபாய்க்கும், கை கூட 4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.