மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தேவூர் பகுதியில் வசித்து வருபவர் கேசவன். இவருக்கு சசி என்ற பெண்ணுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் சசிக்கு போலீஸ்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்தப் பழக்கம் போலீஸ்காரரின் வீட்டிற்கு தெரிய வந்ததால் அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்துள்ளது. இதனால் சசி மனமுடைந்து மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்றை எழுதியுள்ளார். இந்த மனுவில் தன்னை போலீஸ்காரருடன் சேர்த்து வைக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை சசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொடுக்க வந்துள்ளார். ஆனால் தேர்தல் நடத்தை விதி முறைகள் காரணமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. அதனால் அவர் வேறு வழியின்றி தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை கண்ட பாதுகாப்பு போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி காப்பாற்றியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சசியிடம் விசாரணை நடத்தியபோது அவர் நடந்ததை கூறி என்னை போலீஸ்காரருடன் சேர்த்து வையுங்கள் என்று கண்ணீருடன் கூறியுள்ளார். அதன்பின் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.