பெரம்பலூரில் இரு தரப்பினர்களிடையே இடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் படுகாயமடைந்ததால் இரு தரப்பினரை சேர்ந்த 18 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் கலியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் கமலக்கண்ணன் என்பவரது குடும்பத்திற்கும், கலியம்மாள் குடும்பத்தினருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று முன்பகையால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஒருவர் மீது ஒருவர் கல்லை வீசி பயங்கரமாக தாக்கியுள்ளனர்.
இதில் கமலக்கண்ணன், முத்துசாமி, அண்ணாதுரை, புஷ்பவள்ளி ஆகியோரும், மற்றொரு தரப்பில் ஊராட்சி மன்ற தலைவர் கலியம்மாள், பழனியம்மாள், ராமசாமி, தினேஷ் ஆகியோரும் மோசமாக காயமடைந்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த தகராறு குறித்து கலியம்மாள், கமலக்கண்ணன் தரப்பினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கமலகண்ணனும் காளியம்மாள் தரப்பினர் மீது புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மங்களமேடு காவல்துறையினர் இருதரப்பிலும் மோதி கொண்ட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.