விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 95 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்பப் பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது வரை போராட்டக் களத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் கஷ்யப் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனைப்போலவே இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மது வர்மா, விகாஸ் பேல் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. பழிவாங்கும் நோக்கில் ஐடி ரைட்டு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.