உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதால் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் 5000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு நாட்டிற்கும் வருடத்தின் ஒரு நாள் முக்கியமான நாளாக இருக்கும். அதுபோன்று மார்ச் 4 ஆம் தேதி என்பது அமெரிக்காவில் மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது. ஏனென்றால் மார்ச் 4 தான் தேர்தலில் வெற்றி பெற்றவர் அதிபராக பதவி ஏற்றுக் கொள்வர். ஆனால் அந்த வழக்கத்தை மாற்றி ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார்.
ஆனால் இன்னும் சிலர், மார்ச் 4ஆம் தேதி தான் அதிபர் பதவி ஏற்கும் நாள் எனவே அன்று மீண்டும் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக கண்டிப்பாக பதவி ஏற்றுக்கொள்வார் என்று நம்பி வருகின்றனர். இதற்கு முன்பு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் நடத்தப்பட்ட வன்முறையில் இந்த நம்பிக்கை கொண்டவர்கள் தான் இருந்தனர். எனவே இந்தக் கூட்டத்தினர் நாளை மீண்டும் வாஷிங்டனிற்குள் நுழைய இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அந்தப்பகுதியில் இதுவரை 5000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மார்ச் 12 வரை கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட 4900 தேசிய பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட உள்ளனர். ஜனவரி 6ஆம் தேதி நடத்தப்பட்ட வன்முறையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது மீண்டும் வன்முறை ஏற்பட்டு விட்டால் என்ன நிகழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.