நாகையில் 12 மணி நேரமாக கடலில் தத்தளித்த மீனவரை இலங்கை கடற்படையினர் “லைப் ஜாக்கெட்” கொடுத்து காப்பாற்றியது மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மல்லிப்பட்டினம் பகுதியில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நாகப்பட்டினத்தில் உள்ள கோடியக்கரை பகுதிக்கு 7 பேரை அழைத்துக்கொண்டு மீன்பிடிக்க இரவு நேரத்தில் சென்றுள்ளார். இதையடுத்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சின்னப்பன் எதிர்பாராதவிதமாக படகிலிருந்து தவறி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவருடன் சென்ற மற்ற மீனவர்கள் வெகுநேரமாக தேடியும் அவரை காணவில்லை. படக்கிலிருந்து தவறி விழுந்த சின்னப்பன் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த இலங்கை கடலோர காவல் படையினர் தத்தளித்துக்கொண்டிருந்த சின்னப்பனை தங்களது படகில் ஏறிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். ஆனால் சின்னப்பன் அவர்களுடன் ஏறிக்கொண்டால் தன்னை இலங்கையில் சிறை பிடித்து வைத்து விடுவார்களோ என்ற பயத்தில் படகில் ஏற மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இலங்கை கடலோர காவல் படையினர் அவருக்கு உதவும் விதமாக “லைப் ஜாக்கெட்” கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். சின்னப்பன் “லைப் ஜாக்கெட்டை” வைத்து மிதந்து கொண்டு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் அவரை மீட்டு கோடியக்கரை பகுதிக்கு அழைத்து வந்துள்ளனர். கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவருக்கு இலங்கை கடலோர காவல்படையினர் மனிதாபிமானத்துடன் உதவிய சம்பவம் மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.