கணவன் தனது பேச்சை கேட்காததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் சந்தோஷ் குமார் என்ற ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவர் ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வினுப்ரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவிற்கு செல்ல முயற்சித்தபோது, வினுப்ரியா அவரிடம் தற்போது கொரோனா காலம் என்பதால் பூங்காவிற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அதை கேட்காத சந்தோஷ்குமார் குழந்தைகளை பூங்காவில் விட்டுவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அதன்பின் பிரியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சந்தோஷ்குமார் குழந்தைகளை பூங்காவில் விட்டு விட்டதால், அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும்படி கூறியுள்ளார். இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளையும் பூங்காவில் இருந்து அழைத்து வந்த வினுப்ரியா மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதன் பின் வீட்டிற்கு திரும்பி வந்த சந்தோஷ் குமார் தன் மனைவி வீட்டில் தூக்கில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து டேங்க் பேக்டரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.