மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் நவீன் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தனது தாய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் சுற்றுலாவுக்காக சென்றுள்ளார். இவர்கள் அனைத்து சுற்றுலா தளங்களையும் சுற்றி பார்த்துவிட்டு, ஊட்டியிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக தலைகுந்தா பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென அவரது காரில் பழுது ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள ஒர்க்ஷாப்பில் காரை நிறுத்தியுள்ளார். அதன்பின் காரை சரி செய்த மெக்கானிக் வெளிமாநில வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மெக்கானிக்கின் அறிவுரைப்படி, அவரை நவீன் குமார் தனது குடும்பத்தினருடன் காரில் அனுப்பி வைத்துவிட்டு பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கல்லடி மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென நவீன்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதி விட்டது. இந்த விபத்தில் நவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுமந்து காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.