டிராக்டர் டிரைவர் தீப்பற்றி எரிந்த வைக்கோலை சாலையில் இறக்கி விட்டு சென்ற சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் சாலையில் டிராக்டரில் வைக்கோல் ஏற்றி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டிராக்டர் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென டிராக்டரில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கவனித்த டிராக்டரின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் டிராக்டர் டிரைவரிடம் வைக்கோல் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் டிராக்டரை விட்டு கீழே இறங்கி வந்து வைக்கோலை சாலையில் இறக்கிவிட்டு டிராக்டரை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் சாலையில் இறக்கப்பட்ட வைக்கோல் மளமளவென எரிந்து நாலாபுறமும் தீ பரவியுள்ளது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் அப்பகுதியில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்தின் அருகில் குடியிருப்புகள் இல்லாததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.