குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.
குடிநீர் வசதி வேண்டி ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உசிலங்குளம், அய்யனார்புரம், காந்திநகர் போன்ற பகுதிகளில் குடிநீர் சரிவர விநியோகிக்கப்படுவது இல்லை. மேலும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் ஆலங்குடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கழிவுநீர் கலந்த குடிநீரை குடங்களில் பிடித்துள்ளனர்.
இந்த மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எடுக்கப்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். மேலும் ஒருவர் தனது ஸ்கூட்டரில் நகராட்சியில் சரியான குடிநீர் விநியோகிக்கப்பட்டுவதில்லை எனவும் பாதாள சாக்கடை பணி நிறைவு பெறவில்லை எனவும் இரு பதாகைகளை ஸ்கூட்டரின் முன்னும் பின்னும் தொங்கவிட்டு நகரின் பல பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.