நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதனையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் வகுப்புகள் நடத்தப்படாமல் குறுகியகால வகுப்புகளை கொண்டு மாணவர்கள் தேர்வு எழுத தயாராகி கொண்டிருப்பதால் மாணவர்களுக்கு மனதில் தேர்வு குறித்த அச்சம் உண்டாகியுள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் மாணவர்களைத் தேர்வு செய்ய ஆன்லைனில் படைப்புத் திறன் போட்டி மார்ச் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் www.innovateindia.mygov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கலந்து கொள்ளும் அனைவருக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பாக சான்றிதழ் வழங்கப்படும்.