நாகப்பட்டினத்தில் நெல் மூட்டைகளை மதுபோதையில் தீ வைத்து கொளுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் பகுதியில் ஐயாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளங்கோவன் என்ற மகன் உள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக மருங்கூர் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு நெல் மூட்டைகளை வைப்பதற்கு இடம் இல்லாத காரணத்தினால் அங்கு உள்ள சாலையோர பகுதியில் முட்டைகளை வைத்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அந்த நெல் மூட்டைகளை மர்ம நபர் ஒருவர் தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
இதனால் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நெல் மூட்டைகள் தீயில் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து இளங்கோவன் நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மருங்கூர் பகுதியில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பவர் தான் மதுபோதையில் நெல் மூட்டைகளுக்கு தீ வைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.