தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் காலண்டர்கள் விநியோகித்த பா.ஜ.கவினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோவில்களில் மாசி மாத திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் குமாரபாளையத்தில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் கோவில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாஜகவினர் மோடி மற்றும் மாவட்ட செயலாளர் ஓம் சரவணா ஆகியோரின் உருவப்படம் பொறித்த தினசரி காலண்டர் விநியோகித்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பாஜகவினர் இதுபோன்று செய்வதை அப்பகுதியில் உள்ள சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 900 காலண்டர்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் குமாரபாளையம் நகர பாரதிய ஜனதா துணைத் தலைவர் கிருஷ்ணன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அதிமுகவினர் அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு எவர்சில்வர் தட்டு. டிபன்பாக்ஸ். பட்டு சேலைகள் உள்ளிட்டவைகள் வினியோகித்துள்ளதாக திமுக சார்பில் புகார் வந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.