ஆப்கானிஸ்தானில் 3 பெண் பத்திரிக்கையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள எனிகாஸில் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் 4 பெண் ஊழியர்கள் பணியை முடித்துவிட்டு நேற்று மாலையில் வழக்கம்போல் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இன்று உயிரிழந்த 3 பெண் பத்திரிகையாளர்களின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே, கடந்த சில நாட்களாகவே ஆப்கானிஸ்தானில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் முக்கிய நபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தாலிபான் தீவிரவாத அமைப்பினர் தான் என்று குற்றம் சாட்டினர். ஆனால் தாலிபான் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியது. தற்போது ஐஎஸ் அமைப்பினர் நாங்கள் இந்த குற்றத்திற்கு பொறுப்பு ஏற்கிறோம் என்று கூறியுள்ளனர். 3 பெண் பத்திரிகையாளர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.