முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டில் இவர்கள் மத்திய அரசின் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளனர். அந்த சமயம் தேவதானம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த அ.தி.மு.க-வை சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் வீடு கட்டுவதற்குரிய தொகையான 59 ஆயிரத்து 541 ரூபாயை காசோலையாக தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு ஆறுமுகம் வீடு கட்டிய தொகைக்கான காசோலையை வழங்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக தனக்கு கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் பச்சையப்பனின் மனைவி சுதா புகார் அளித்தார். அதன்பிறகு காவல்துறையினரின் அறிவுரைப்படி சுதா ரசாயன பொடி தடவிய லஞ்ச ரூபாயை ஆறுமுகத்திடம் கொடுத்த போது அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மடக்கி பிடித்து விட்டனர். இந்த வழக்கானது விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், குற்றவாளியான ஆறுமுகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் மீண்டும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.