கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் காலனி பகுதியில் லியோபால் என்ற வேன் டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா மேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களது பக்கத்து வீட்டில் ராதாகிருஷ்ணன் என்ற கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். இந்த ராதாகிருஷ்ணனும், சுஜாதா மேரியும்யும் அடிக்கடி பேசி வந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளகாதலாக மாறிவிட்டது.
இது குறித்து அறிந்த லியோபால் அந்த கல்லூரி மாணவரையும், தனது மனைவியையும் கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு இடையூறாக இருக்கும் தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்ட சுஜாதா அதனை ராதாகிருஷ்ணனிடம் கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று லியோ பால் மது போதையில் இருந்தபோது சுஜாதா மேரியும், ராதாகிருஷ்ணனும் சேர்ந்து அவரது தலையில் இரும்பு கம்பியால் அடித்ததோடு, கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளனர்.
அதன்பின் தனது வீட்டு தோட்டத்தில் குழி தோண்டி உடலை புதைத்துள்ளனர். இந்நிலையில் தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்ற எண்ணத்தில் சுஜாதா மேரி தனது மாமனாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு லியோபாலை காணவில்லை என தெரிவித்துள்ளார். அதன்பிறகு இருவரும் காவல்துறையிடம் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையில் அவரது மாமனார் அளித்த புகாரின் பேரில், அந்த இடத்தை தோண்டிய போலீசார் அழுகிய நிலையில் இருந்த லியோபாலின் உடலை மீட்டு அதே பகுதியில் வைத்து மருத்துவ குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.