கால் தவறி குளத்தில் விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் வசித்து வந்தவர் கணேசன். இவர் அதே பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இதற்கிடையில் வாராப்பூர் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அது கணேசனின் உடல் தான் என்பது உறுதியானது. அதன்பின் இதுகுறித்து சம்பட்டிவிடுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கணேசன் கால் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் என கூறியுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.