குரங்கிடம் இருந்து தப்பிப்பதற்காக சிறுவன் சிலை போல் நடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள மறைகுளம் கிராமத்திற்குள் நுழைந்த குரங்கு ஒன்று தெருவில் நடமாடும் அனைவரையும் துரத்தி கடித்துள்ளது. மேலும் அந்த குரங்கு 15க்கும் மேற்பட்ட நாய்களையும் கடித்து குதறி உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பள்ளியின் சுற்றுச்சுவரில் 10 வயது சிறுவன் ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த குரங்கு சிறுவன் அருகே சென்று உள்ளது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து சிறுவன் குரங்கு கடித்து விடக் கூடாது என்ற அச்சத்தில் சிலை போல் நடித்து சுமார் 7 நிமிடங்கள் வரை அசையாமல் அமர்ந்து இருந்துள்ளான். அப்போது அந்த குரங்கு சிறுவனை அசைத்து பார்த்தும், முத்தம் கொடுத்தும் பல விதங்களில் தொந்தரவு செய்துள்ளது. ஆனால் அந்த சிறுவன் அசையாமல் அப்படியே இருந்ததால் சிறிது நேரம் கழித்து அந்த குரங்கு அங்கிருந்து சென்று விட்டது. இவ்வாறு சிறுவன் சாதுர்யமாக செயல்பட்டு குரங்கிடம் இருந்து தப்பித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.