கணவரை இழந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் இடம் 33 வயது பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அந்தப் பெண்ணின் கணவர் இறந்து விட்டதால் தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வாழ்ந்து டிபன் கடை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவரது கடைக்கு முன்பு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் இவரது கடைக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அதன் பின் இந்தப் பெண்ணின் வாழ்க்கை குறித்து தெரிந்து கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருநாள் இந்த பெண்ணை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது சப் இன்ஸ்பெக்டர் தான் மனைவியை விட்டு பிரிந்து வாழ்வதாகவும், கணவரை இழந்த இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு மனைவியாக ஏற்றுக் கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார். இதனை நம்பிய பெண் சப் இன்ஸ்பெக்டருடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வீடு கட்டுவதற்காக இந்த பெண்ணிடம் இருந்து 20 பவுன் நகை மற்றும் 5 லட்சம் பணத்தை வாங்கி சென்றுள்ளார்.
இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் அவரது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதை அறிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்து அவரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு சப்-இன்ஸ்பெக்டர் உன்னை திருமணம் செய்ய முடியாது என்றும், புகார் அளித்தால் ரவுடிகளை வைத்து குடும்பத்தை தீர்த்து கட்டி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணம் மற்றும் நகையை மீட்டு தருமாறு அந்த இளம்பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷ்னர் தெரிவித்துள்ளார்.